பக்கம் எண் :

238கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1

26. கடலின் பெயர்கள்

கண்ணுக்கும் எட்டாது கடந்து நிற்கும்
    காரணத்தால் உனைக்கடலென் றழைத்தார் முன்னோர்;
எண்ணுக்குள் அடங்காத புனற்ப ரப்பை
    ஏற்றுளதால் பரவையென இயம்பி நின்றார்;
உண்ணற்கோ உவர்ப்புடையாய் அதனா லுன்னை
    உவரியெனப் பெயருரைத்தார்; மலையி னின்று
மண்ணுக்குள் ஓடிவரும் எல்லா ஆறும்
    மருவியுனைப் புணர்வதனால் புணரி என்றார்.

அளக்கரிது நின்பெருமை எனவு ணர்ந்தே
    அளக்கரெனப் பெயரிட்டார்; அலை யெழுப்பி
முழக்குகிற வேலையினை ஓய்வே யின்றி
    முப்பொழுதும் செய்வதனால் வேலை என்றார்;
விளக்கமுறச் சொலமுடியா ஆழங் கொண்டு
    விளங்குவதால் ஆழியென்றார்; ஆக்க லோடும்
அழித்தலெனக் காத்தலென மூன்று நீர்மை
    அமைந்தமையால் முந்நீரென் றானாய் இங்கே.

ஆரமுடன் பவழமெலாம் வாரி வாரி
    அளிப்பதனால் பயன்பெறுவோர் வாரி என்றார்;
வாரெனுஞ்சொல் நீட்சிஎனும் பொருளைக் கொண்ட
    வாய்மையினால் நீண்டவுனை வாரி என்று
பேரெழுதி வைத்தனரோ? யாரே கண்டார்!
    பேருலகில் அமைதியினைக் காணா தென்றும்
நேரமெலாம் சலசலவென் றொலிப்ப தாலே
    நினைச்சலதி எனவுரைத்து மகிழ்ந்தார் போலும்!

27.11.1980