பக்கம் எண் :

நெஞ்சிற் பூத்தவை239

27. மலையிற் பிறந்த மகள்

(திருச்செங்கோடு)

விண்ணகத்து வான்வழியில் நடந்து வந்த
    மின்விழியன் இடிக்குரலன் முகிலன் என்பான்,
மண்ணகத்தே திமிர்ந்தெழுந்து நிமிர்ந்து நிற்கும்
    மலைமகளின் எழில்கண்டான் காதல் கொண்டான்!
பண்ணிசைக்குங் குயிலினங்கள் பாடி நிற்கப்
    பறந்துவரும் சுரும்பினங்கள் வாழ்த்தொலிக்கப்
பெண்ணவட்குக் கொழுநனென ஆகி விட்டான்;
    பின்னரவள் மெல்லுடலைத் தழுவி நின்றான்.

பலநிறத்துக் குலமலர்கள் விரிந்து நிற்கப்
    பையவரும் மென்காற்று மெய்யில் வீச,
நலமிகுந்த மலைமகளோ தழுவி நின்ற
    நாயகன்றன் நெஞ்சத்தைக் குளிரச் செய்தாள்;
கலவிக்குப் பின்முகிலன் துளிகள் சிந்தக்
    கருக்கொண்ட மலையரசி உயிர்த்து நின்றாள்;
கலகலத்த குரலெழுப்பும் அருவி என்ற
    காதல்மக வீன்றெடுத்தாள் அந்த நங்கை.

பெற்றெடுத்த பிள்ளையினைத் தனது மார்பில்
    பேதையவள் தத்திவிளை யாட விட்டாள்;
கற்றொடுத்த இடமெல்லாம் தவழ்ந்து தத்திக்
    கனிமரங்கள் இடைப்புகுந்து குதித்துத் தாவி
மற்றடுத்த பள்ளமெலாம் விழுந்தெ ழுந்து
    மலர்க்கொடிகள் செடிகள்பல பறித்தெ றிந்து
கற்றடுக்கச் சலசலக்கும் மழலை பேசிக்
    கண்குளிர ஆடிவந்த தந்தப் பிள்ளை!