240 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1 |
தன்னிடையில் வைத்திருந்த பிள்ளை தன்னைத் தரையின்மிசை இறக்கிவிட, அருவி என்ற முன்மருவும் பெயர்மாறி, உருவம் மாறி முழங்கிவரும் ஆறென்னும் பெயரைப் பெற்றாள்! பின்னரவள் முல்லைநிலக் காடு புக்குப் பீடுபெற நடந்துவந்தாள்; முல்லை என்ற கன்னியொடு தோழமைகொண் டுலவி வந்தாள்; காடெல்லாம் குழலோசை இனிக்கக் கேட்டாள்! மருதமெனும் நிலம்புகுந்து தங்கித் தங்கி மனமகிழ்ந்து நடைபயின்றாள்; உழவ ரெல்லாம் வருகவென வரவுரைத்தார்; மகிழ்ந்து போற்றி வாழ்த்துரைத்தார்; கலைபலவும் விரித்து வைத்தார். இருபுறமும் பசுஞ்சோலை செழித்து நிற்க இயற்கைஎழில் எவ்விடத்தும் குலுங்கி நிற்க மருவுகிற வயலெல்லாம் பசுமை யாக்கி மாந்தருளம் செம்மையுற நடந்து சென்றாள்! மலையகந்தான் ஆற்றுக்குப் பிறந்த வீடு; வளமலிந்த கடற்பரப்பே புகுந்த வீடு; தொலைவறியா வளமுடைய முல்லைக் காடு தூயவட்குச் சிற்றன்னை; அவட்க டுத்த கலைமலிந்த காமலிந்த மருதம் அந்தக் காரிகைக்குத் தாய்மாமன், மகிழ்ந்து பெற்ற தலைமகளைப் புக்ககத்துக் கனுப்பும் போது தாய்தந்த சீர்வரிசைக் களவே யில்லை! சந்தனங்கள் தொகுத்தளித்தாள், தினைய ளித்தாள், சாதிமரத் தேக்களித்தாள், மதங்கொள் யானைத் தந்தங்கள் பலவளித்தாள், மணியும் முத்தும் தங்குதடை யில்லாமல் வாரித் தந்தாள்; |