பக்கம் எண் :

நெஞ்சிற் பூத்தவை241

‘வந்தெங்கள் கலிதீர்த்த மகளே, வேண்டும்
    வளமெல்லாம் வாரிப்போ’ என்று சொன்னாள்;
சொந்தங்கள் குறைசொல்லக் கூடா தென்றே
    சொலற்கரிய சீர்வரிசை தந்தாள் அன்னை!

முல்லைஎனும் சிற்றன்னை, தன்பால் வந்த
    முதல்மகளைத் தலைநீவி உச்சி மோந்து
மல்லிகையால் தலைக்கோலம் செய்து விட்டு
    மான்கன்றும் விளையாடத் தந்தாள்; மேட்டுக்
கொல்லைதரும் அவரையொடு வரகு சாமை
    கொழுந்துவரை முதலான பொருள்கள் தந்தாள்;
பல்வகைய மலர்சூட்டிப் பாலும் நெய்யும்
    பரிந்தளித்து வாழ்த்துரைத்து நின்றாள் அங்கு.

மருதமெனும் மாமனவன் தன்பால் வந்த
    மலையரசி மகளைத்தா மரைமு கத்தால்
பெருமகிழ்வு காட்டிவர வேற்று நின்றான்;
    பேராம்பல் மலர்சூட்டி வாழ்த்தி நின்றான்;
மருமகளின் மனமகிழ நெல்ல ளந்தான்;
    வாழையொடு கமுகுதரும் குலைகொ டுத்தான்;
திருவுடையன் வளம்பலவும் உவந்த ளித்துச்
    செங்கரும்பும் வந்தவட்குத் தந்து நின்றான்.

பெற்றவரும் மற்றவரும் மகிழ்ந்து தந்த
    பெருமைமிகு சீர்வரிசை அனைத்துங் கொண்டு
நற்றுணைவன் கடற்பேரான் அவனை நோக்கி
    நயந்தோடி நலம்பாடி விரைந்து சென்றாள்;
மற்றவனும் பெருமகிழ்வால் அவளைத் தாவி
    மார்பிறுக மனமுருக அணைத்துக் கொண்டான்;
பெற்றுவரும் வரிசைஎலாம் கொள்க என்றாள்;
    பெருமகனோ அலைக்கையால் கொள்ளேன் என்றான்.