பக்கம் எண் :

242கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1

28. வான்மழையே வா!

வான்மழையே! வளங்களெல்லாம் வழங்குந்தாயே!
    வளர்கருணைக் கருமேனி வெள்ளை யாகி
ஏன்மழையே பொழியாது வஞ்சித் தாய்நீ?
    இருநிலத்துக் கலிபடர உளங்கொண் டாயோ?
ஆன்முதலாம் உயிரினங்கள் கதறு கின்ற
    அகவலெலாம் படவிலையோ நினது காதில்?
ஈன்வயிறு மக்களிடர் கண்டும் வாளா
    இருந்திடுமேல் மருட்பாடு தோன்று மன்றோ?

நெடிலடியால் நீநடக்க வேண்டு கில்லோம்
    நிலஞ்சிரிக்க அவளடியால் நடந்தாற் போதும்;
அடிகுறையுஞ் சிந்தடியால் கால்கு றைந்த
    குறளடியால் அடிபிறழ ஊர்ந்து வந்தால்
படிவறளும் படியாகும்; பருவத் தேஇப்
    படிநடந்தால் எப்படியிவ் வுலகம் உய்யும்?
இடிதவழக் கொடிபடரும் மின்னல் பாய
    ஏரடிகள் நடைபயில வருவாய் இன்றே!

அசையாத பொருளுக்கும் உலகில் உள்ள
    அசைகின்ற பொருளுக்கும் பசையாய் நிற்பாய்!
இசையால்நின் சீர்முழுவதும் எடுத்துச் சொல்ல
    எழுத்தனைத்தும் சேர்த்தாலும் முடியா தம்மா!
நசையால்நின் னடிதொட்டுத் தொடைகள் சூட்டி
    நாளெல்லாம் தொழுகின்றோம் அழுது நின்றோம்
பசியாலே தளையுண்ட மக்க ளுக்குப்
    பாலமிழ்தம் பொழிவதுநின் கடமை யன்றோ?