ஏருழவன் பாட்டுக்குப் பொழிப்பு மோனை இணைமோனை யாகிஅணி கூட்டி நிற்பாய்! மாரியென நின்பெயரைச் சொல்ல லன்றி மாறியென ஒருநாளும் உரைத்த தில்லை; பாருழல முரண்டொடையாய் மாறி நின்றாய்! பயன்முழுதும் செந்தொடையாய் மாறிற் றம்மா! காருனது மனத்தியைபுத் தொடைபொ ருந்தக் கருணைமழை பொழிந்தருள்வாய் உலகம் உய்ய! மயங்கிசையும் தாழிசையும் கேளா வண்ணம் மழையோசை கேட்கட்டும்; செய்யுள் எல்லாம் பயன்கெழுமி வளங்கொழிக்கத் துள்ளல் ஓசை பரவட்டும் வனப்புமிகும் இல்ல மெல்லாம் வயங்கிழையார் வளையோசை பொங்கப் பொங்கல் வழங்கட்டும்; புறநடையில் மாந்தர் செல்லா தியங்கட்டும்; ஒழுகிசைவான் வழங்க எங்கும் இன்பமெலாம் பொங்கட்டும், மழையே வாவா. (வான்பொய்த்த போது வருந்திப் பாடிய பாடல்.) (பாடலில் யாப்பிலக்கணச் சொற்கள் பயின்று வந்துள்ளன. அவற்றின் பொருள் நயங்கண்டு மகிழ்க,) -9-12-1974 |