பக்கம் எண் :

244கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1

29. உயிர்ப்பொம்மை

பத்துத் திங்கள் பரிவுடன் வயிற்றில்
வைத்துக் காத்து வளர்த்தஓர் பூஞ்செடி;
மனத்தில் ஊறிய மாசறு நினைவுகள்
அனைத்தும் சேர்தரத் தளிர்த்த பசுந்தளிர்;
இருவர் அன்பும் இணைந்து பிணைந்து
மருவிய நாளில் மலர்ந்ததோர் அரும்பாம்;
இருவிழி குளிர ஈன்றோர் மகிழக்
குறுகுறு நடைபயில் கோலச் சிறுதேர்;
பொருளொடு புணராப் புதுவகை மொழியைச்
சிறுமலர் வாயால் சிந்திடும் பைங்கிளி;
சுருள்படு சிறுமுடி, மருள்நிறை கருவிழி,
எழில்தவழ் செவ்விதழ், இணையிலாக் குறுநடை,
தளிர்நிகர் சிறுவிரல், தங்கத் திருநிறம்,
குளிர்மொழி அனைத்தும் கொளும்உயிர்ப் பொம்மை;
அம்மக வுயிரை அருந்திய நோயினை
அம்மையென் றறைகுவர்; அடுக்குமோ அப்பெயர்?
எங்கே அவ்வெழில்? எங்கே அவ்வுயிர்?
எங்கே எங்கே என்றுநான் கதறினேன்;
பெற்ற வயிற்றில் பற்றிய தீயை
மற்றவர் எவ்வணம் மாற்றுவர்? எனினும்
என்விழி நீரை எடுத்தெடுத் தூற்றினேன்
நின்னழல் தணிந்து நிமிர்ந்தெழு தாயே!

(குழந்தையைப் பிரிந்த தாய்க்குக் கூறிய ஆறுதல்.)

25.09.1975