பக்கம் எண் :

நெஞ்சிற் பூத்தவை245

30. நெஞ்சிற் புகுந்த வேல்

அறிவும் பண்பும் அமைதியோ டெழிலும்
செறிதரு திருமுகம் மருவிய குழலி!
முகமல ரிதழில் தவழ்தரு மூரலில்
தொகைநூ லினிமை தோன்றுதல் கண்டேன்;
உள்ளக் கருத்தைத் தெள்ளிதின் உரைக்கும்
கள்ளம் அறியாக் கயல்விழி கண்டேன்;
ஆறாம் வகுப்பே தேர்நீ, ஒருபிழை
நேரா தெழுதும் நேர்த்தி கண்டேன்;
பிள்ளைமை நிலையிலும் பெரியவள் போல்நீ
என்னை ஓம்பிய இயல்புங் கண்டேன்;
பெதும்பை நின்னை வியந்து புகழ்ந்தேன்.
ததும்பும் இனிமைத் தமிழை நின்வாய்
மழலை வடிவில் தருமென மகிழ்ந்தேன்;
அழகோ வியமே! இம்மகிழ் வெங்கே?
பூசாச் செம்மை பொருந்திய நின்னிதழ்
பேசா தெனலும் பேதுற் றயர்ந்தேன்;
ஆண்டவன் படைப்பென அன்னை நவின்றனள்
ஈண்டவன் யாண்டுளன்? எனயான் வெகுண்டு
கொடியன் அவனைக் கொல்லுவன் பாய்ந்தெனத்
தொடுவேல் எடுத்துத் துணிந்து நடந்தேன்;
எங்கோ மறைந்தனன்! எடுத்தஅவ் வேலைப்
பொங்குமென் னெஞ்சிற் புகுத்திக் கொண்டேன்;
நின்நா மொழிபுகல் நாள்வரின் நெஞ்சிற்
பாய்வே லதனைப் பறித்தெறி வேனே!

(புதுச்சேரி கவிதைச் செல்வர் கல்லாடன் மகள் திருக்குழலி பேசாமையறிந்து மனம் நொந்து பாடியது)

4.05.1987