பக்கம் எண் :

246கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1

31. ஆசையெனும் ஆழ்கடலில்

ஆசையெனும் ஆழ்கடலில் வலைவீசினான்
அதிற்கிடைக்கும் மீன்களுக்கு விலைபேசினான்
காசுபெற வேமனிதன் நிலைமாறினான்
கண்ணியத்தை விற்பதற்கும் விலைகூறினான்!

காதலெனும் மீனதனைக் கண்டுபிடித்தான்
கலியாணச் சந்தையிலே கொண்டுகொடுத்தான்
போதுமென்ற நெஞ்சமின்றி நின்றுதுடித்தான்
போதாமல் தான்தனியே கண்ணீர் வடித்தான்!

வாணிகத்துப் பெருமீனைப் பற்றநினைத்தான்
வஞ்சகத்தைத் தூவியதைச் சுற்றி வளைத்தான்
நாணயத்தை நேர்மையுடன் கொன்றுமுடித்தான்
நாள்முழுதும் கொள்ளையிடும் நெஞ்சுபடைத்தான்!

சொன்னதெல்லாம் நம்புகிற மாந்தரிடத்தே
தொண்டெனுமோர் போர்வையினைப் போர்த்து நடித்தான்
கன்னமிடுங் கோல்களின்றிக் காசு பறித்தான்
கலக்கிவிட்ட நீரதனில் மீன்கள் பிடித்தான்!

1.1.1982