பக்கம் எண் :

நெஞ்சிற் பூத்தவை247

32. எத்தனைப் பாடல்கள்!

முதலில் கேட்பது தாலாட்டு
முடிவில் முகாரி எனும்பாட்டு
இதனிடை வாழும் மனிதனவன்
எத்தனைப் பாடலைப் பாடுகிறான்!

- முதலில்

காதல் இன்பங் கனிந்திடும் ஒன்று
கலக்கம் ஏக்கம் கலந்திடும் ஒன்று
மோதும் அவலம் முகிழ்த்திடும் ஒன்று
முழுதும் அழுகையில் முடிந்திடும் ஒன்று

- முதலில்

குரலும் வீணையுங் குழம்புவ துண்டு
கொட்டிய தாளந் தப்புவ துண்டு
பொருளும் பாட்டும் முரண்பட லுண்டு
பொருளே விளங்காப் பாடலு முண்டு

- முதலில்

விருப்பை வளர்க்கும் பண்களு முண்டு
வெகுளி மிகுக்கும் பாடலுமுண்டு
வெறுப்பைக் கொடுக்கும் ஓசையு முண்டு
வீரமும் மானமும் இடையிடை உண்டு!

- முதலில்