பக்கம் எண் :

248கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1

33. வாழ்க்கைப் போராட்டம்

(கலிவெண்பா)

ஆழம் மிகவுடைய ஆறென்று வாழ்க்கைதனைச்
சூழும் அறிவதனால் சொன்னால் மிகப்பொருந்தும்;
வேகப் புனல்தள்ளி வெள்ளத் தெதிர்நீந்திப்
போகப் பயின்றவரே போற்றுங் கரைகாண்பர்;
வட்டப் பெருஞ்சுழிகள் வாய்திறந்து நிற்பதுண்டு-
எட்டிப் பிடித்திழுத்தே ஏப்ப மிடமுயலும்;
மூழ்கிச் சிலகாலை மூச்சடக்கிச் செல்கின்ற
சூழ்நிலையும் நேர்வதுண்டு சோர்ந்துவிடக் கூடாது;
துன்பம் ஒருகரையாய் இன்பம் மறுகரையாய்,
முன்பே அமைந்த முறைமை யுடையதுதான்;
அந்தக் கரையிலையேல் அவ்வாற்றின் போக்கதனால்
எந்தத் துயர்விளையும் என்றுரைக்க ஏலாது;
கூட்டாய் முகில்பொழியக் கூடிப் புனல்பெருகும்
காட்டாறாய் ஒவ்வொருகால் காண்பதுண் டவ்வாழ்க்கை;
சேறாய்க் கலங்கிச் சிதறிக் கழிநீராய்,
ஊராமல் ஊர்ந்துவரும், ஓடிக் குழிவீழும்,
நாற்றம் மிகுந்திருக்கும் நாட்டில் சிலர்வாழ்க்கை,
மாற்றி யமைக்க வழியறியா தேங்குகிறார்;
நல்லமலர்ச் சோலைக்கும் நல்வாழ்க்கை ஒப்பென்று
சொல்வதற் குள்ளம் துடிப்பதனால் சொல்கின்றேன்;
செய்கையுடன் பண்பு சிறந்திருக்கும் நன்மனையாள்
மெய்வருடி இன்புறுத்தும் மென்தென்றற் காற்றாவாள்;
நண்ணி மயக்குறுத்தும் நன்மழலைச் செல்வங்கள்
கண்ணைக் குளிர்விக்கும் வண்ணமலர்க் கூட்டங்கள்;