பக்கம் எண் :

252கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1

செந்தா மரைமுகத்தில் சேர்ந்த சிரிப்பெங்கே?
நந்தா ஒளியெங்கே நன்மலர்ச்சி தானெங்கே?
வந்த துயரத்தை மாற்றும் மருந்தாகும்
இந்த எழிலமுகத்தில் ஏக்கம் படருவதோ!
என்று துடிதுடித்தேன் இன்ப நிலைமறந்தேன்
ஒன்றும் புரியாமல் உள்ளம் பதைபதைத்தேன்;
பால்தந்த பாவாய் பசுந்தமிழே என்னுயிரே
சேல்தந்த நின்விழிகள் செக்கச் சிவந்தனவே
நெஞ்சங் கடுக்க நிகழ்ந்த செயலென்ன?
வஞ்சியுன் வாண்முகத்தில் வாட்டம் அரும்புவதேன்?
செந்தமிழ்க்கும் உன்றனுக்குந் தீங்குவர நான்தரியேன்
வந்ததுயர் யாதென்று வாய்விட்டுச் சொல்கண்ணே
என்றுருகி நான்கேட்டேன்; என்றன் உயிரனையாள்
“நன்று நன்று நும்நடிப்பு! நாடகமோ ஆடுகின்றீர்?
நல்ல படமென்று நாளும் பலர்கூடிச்
செல்லும் அதுகாணச் சேர்ந்துநாம் சென்றுவர
நாலாறு நாளாக நான்கெஞ்சிக் கேட்கின்றேன்
பாலாகத் தேனாகப் பேசிப் பகட்டுகின்றீர்
இன்றென்றும் நாளையென்றும் ஏய்த்து வருகின்றீர்!
ஒன்றென்ன நூறுண்டே உங்கள் விளையாடல்!
அஞ்சாறு திங்களா ஆரணிப் பட்டொன்று
கெஞ்சாத நாளில்லை கேளாத நேரமில்லை
காஞ்சிபுரப் பட்டா கனத்தவிலை என்பதற்கு?
வாஞ்சை யிருக்குமெனில் வாங்கித் தருவீர்கள்;
இன்னும் புகல்வதெனில் எவ்வளவோ ஈங்குளவே!”
என்னும் மொழிகூறி ஏந்திழையாள் ஊடிநின்றாள்;
ஆடல் மயிலணங்கே ஆருயிரே தேன்மொழியே!
ஊடல் மிகுந்தமையால் உள்ளம் புலந்தனையோ?
ஆரணி ஒன்றென்ன ஐம்பதுடன் காஞ்சிபுரம்
நூறணியக் காலம்வரும் நேரம்வரும் நுண்ணிடையே
ஊடல் தவிர்ந்தெழுக உன்மகிழ்வே என்மகிழ்வு
பாடல் தருஞ்சுவையே பண்பின் உறைவிடமே