பக்கம் எண் :

நெஞ்சிற் பூத்தவை255

36. புதிய உலகம்

அழகொழுகுந் தாமரைப்பூ மலர்ந்து காட்ட
    அதன்நடுவே இருகுவளை விரிந்தி ருக்க
எழில்தவழும் எள்ளின்பூ எடுப்பாய் நிற்க
    இனியநிறத் தரக்காம்பல் அவிழ்ந்து தோன்ற
கொழுமுகைகள் செறிமுல்லை வரிசை காட்டக்
    குவிகமல மொட்டிரண்டு நிமிர்ந்து நிற்கச்
செழுமையுறு செங்காந்தள் விரிந்து தோன்றச்
    செப்பரிய மெல்லியநல் லனிச்சம் தாங்கி

ஒசிந்தாடி வருகின்ற கொடியைக் கண்டேன்
    உள்ளமெலாம் நயந்தோடி உருகி நின்றேன்;
கசிந்தோடும் அன்புக்குக் கரைகள் கட்டிக்
    காப்பமைத்தேன்; ஆயினுமவ் வன்பு பொங்கி
வசங்காணாக் காதலெனும் வடிவங் கொண்டு
    வாட்டியதால் அக்கொடியின் மலர்கள் தம்மைக்
கசங்காமல் நுகரஎழும் ஆசை காட்டிக்
    கண்ணிமைக்க மனமின்றி நோக்கி நின்றேன்;

அவள்முகத்தில மாங்கதுப்பில் அரும்பி நின்ற
    அணிமிகுந்த இளஞ்சிவப்பை, மலையில் மண்ணில்
தவழ்நிறத்துப் பூவிலெலாங் கண்ட தில்லை!
    தமிழச்சி நாணத்தின் வண்ணம் போதும்!
குவளைமலர்க் கருவிழியை ஓரம் போக்கிக்
    குனிந்துநிலம் கால்விரலால் கிளறி நின்றாள்
தவளமலர் நகைமறைத்த இதழ்கள் மீது
    தனித்துடிப்பை முறுவலொடு தவழவிட்டாள்.