பக்கம் எண் :

நெஞ்சிற் பூத்தவை257

37. பனிபொழியும் நிலவில்...

துறைதோறுந் துறைதோறுந் தீமை செய்யும்
    துணிவுடைய மாந்தர்நிலை எண்ணி எண்ணிக்
கரையேறித் துயரேறிக் கவலை யேறிக்
    காதோரம் நரையொன்று நிமிர்ந்து நிற்க
முருகேறும் மலர்க்குழலாள் அதனைக் கண்டு,
    ‘முதுமைவர அறிவிப்போ?’ எனந கைத்தாள்;
முறைகேடு கண்டதனால் கவலை விஞ்சி
    முதிர்ந்துளதை அறிவிக்குஞ் சின்ன மென்றேன்.

‘எதிர்வீட்டுப் பிள்ளைகளைப் பாரும் அத்தான்,
    எழுந்தவுடன் புத்தகத்தை எடுப்பார் மாலைக்
குதியாட்டம் முடிந்தவுடன் விளக்கை ஏற்றும்
    குறிப்பறிந்து புத்தகத்தைப் படிப்பார் ஈது
மதியூட்டுஞ் செயலன்றோ? பெற்றோர் சொல்லை
    மதித்தொழுகும் பாங்கினைத்தான் பாரும்’ என்றாள்;
எதிர்காட்டுங் காலத்தில் முன்னேற் றங்கள்
    இருத்தலைமுன் னுணர்த்துகிற செயலீ தென்றேன்.

தெருக்கடைசி வீட்டிலுந்தான் பிள்ளை யுண்டு,
    திரிந்தலையும் போக்கினைத்தான் பார்க்கின்றோம் நாம்;
உருப்படுமா றொருசெயலுஞ் செய்வ துண்டா?
    ஒழுங்காகப் பள்ளிக்குச் செல்வ துண்டா?
பொறுப்புடனே புத்தகத்தைத் தொடுவ துண்டா?
    புத்திமதி சொன்னாலுங் கேட்ப துண்டா?
வெறுப்படைந்து பெற்றோரே நொந்த துண்டு
    வீணாகப் போவதற்கீ தறிவிப் பென்றேன்.