பக்கம் எண் :

நெஞ்சிற் பூத்தவை259

38. அவர் வரவில்லை!

கொய்தமலர் பஞ்சணையில் கொட்டி மகிழ்ந்தேன்
கூந்தலிலே பூமுடித்துப் பொட்டும் அணிந்தேன்
நெய்தஎழில் மென்துகிலைக் கட்டி யிருந்தேன்
நெஞ்சமதில் ஆசையெனும் மொட்டும் அவிழ்ந்தேன்

காத்திருந்து காத்திருந்து கால்கள் தளர்ந்தேன்
காணவிலை நான்துடித்து நெஞ்ச முடைந்தேன்
பார்த்திருந்து பார்த்திருந்து கண்கள் சிவந்தேள்
பாதிஉயிர் தாங்கியுள மெய்யும் சுமந்தேன்!

தென்றலது சாளரத்துள் பாய்ந்து வருமே
தேனிலவு வானிடையே காய்ந்து வருமே
கன்றியுடல் மெல்லணையில் சாய்ந்து விழுமே
கட்டுமலர் அத்தனையும் காய்ந்து விழுமே!

வந்திடுவேன் நாளையெனச் சொல்லி யகன்றார்
வந்திலரே நாளுடனே என்னை மறந்தார்
அந்தஒரு நாள்பொறுக்க அன்பு பொழிந்தார்
அன்பரவர் தம்முளத்தில் என்ன நினைந்தார்?

16-3-1982