பக்கம் எண் :

260கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1

39. இசை மாறிய வீணை!

காதலெனும் வீணைதனைக் கையிலெடுத்தேன்
கல்யாணி கேட்குமென மீட்டிமுடித்தேன்
மோதியது மற்றஇசை காது கொடுத்தேன்
முன்னையிசை மாறிடவோ ஆசைபடைத்தேன்!

ஓர்நரம்பில் கையமைத்து யாழைஇசைத்தேன்
வேறிடத்தில் மாறிடயார் கையைஅமைத்தார்?
சீர்விளங்கும் பாடலொன்று பாடநினைத்தேன் - இசை
சேரவில்லை ஆதலினால் நாடிதுடித்தேன்!

மீறிவரும் ஆசையினால் பாடல்படித்தேன்
மாறிவருந் தாளத்தினால் வாடிமுடித்தேன்
யாரிதற்குக் காரணமென் றாவிதுடித்தேன்
ஆறுதலைக் காணவில்லை கண்ணீர்வடித்தேன்!

வேதனையில் வீழ்வதற்கோ வீணையெடுத்தேன்
வீணாகிப் போவதற்கோ மாலைதொடுத்தேன்
சோதனையில் மாள்வதற்கோ ஆசைபடைத்தேன்
சேரகஇசை பாடுதற்கோ பாடலமைத்தேன்?