பக்கம் எண் :

நெஞ்சிற் பூத்தவை263

42. காவிய மேடையில்

தலைவன்:

காவிய மேடையில் பாவலன் பாடிய
    காரிகை இவள்தானோ?
ஓவியம் வல்லவன் தூரிகை தீட்டிய
    ஓருயிர்க் கலைதானோ?

கற்பனை மன்னவன் முத்திரைப் புனைகதை
    கண்டிடும் மகள்தானோ?
சிற்பியில் தேர்ந்தவன் சிற்றுளி யாக்கிய
    மாதவிச் சிலைதானோ?

தலைவி:

பாரினை யாண்டவர் பாண்டிய மன்னரின்
    பரம்பரை இவர்தானோ?
தேரினை ஓர்கொடிக் கீந்திடும் பாரியைச்
    சேர்ந்தவர் இவர்தானோ?

கொடியெனப் பூங்கொடி கோட்டையில் கட்டிய
    கொற்றவன் இவர்தானோ?
கடலென வீரரின் காவியம் படைத்திடக்
    கற்றவர் இவர்தானோ?

15.3.1982