264 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1 |
43. உவமையறியாக் கவிதை ஒருநாள் இரவில் இதழில் உணர்வால் எழுதிய கவிதை மறுநாள் மறுநாள் நினைவில் மழைபோற் பொழியும் இனிமை! மங்கிய ஒளியில் அமர்ந்து மலரணை மீதிற் படிந்து மங்கலப் பாடலை நினைந்து மனத்துட் சுவைத்தேன் மகிழ்ந்து! ஒவ்வொரு சொல்லிலும் உணர்ச்சி உளத்தைக் கிளறுங் கிளர்ச்சி அவ்விர வெல்லாம் மகிழ்ச்சி அடடா எத்தனை மலர்ச்சி! கைம்மலர் மெல்லெனப் பிடித்துக் கண்ணொடு கருத்தைத் தொடுத்துச் செய்ம்முறைப் பாடலை எடுத்துச் சிவந்தன விழிகள் படித்து! ஆடவன் என்னுடன் பழகி அன்புடன் தந்தனன் எழுதி பாடலை நெஞ்சொடு தழுவிப் பாரினை மறந்தேன் எளிதில்! |