பக்கம் எண் :

266கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1

44. அதுவா இதுவா?

தலைவி:

உறவா பகையா கேட்டு வருவாய் - வரும்
உளமா இலையா பார்த்து வருவாய்
இரவா பகலா இந்தப் பொழுதே
இடரே மிகலால் கண்கள் அழுமே!

தலைவன்:

ஒளியா இருளா இந்த மனையில்
உருவா நிழலா என்றன் விழியில்
விழியா கணையா அந்த விழிகள்
வெயிலா நிழலா சொன்ன மொழிகள்!

தலைவி:

கனவோ நனவோ வந்து மறையும்
கணையோ மலரோ கட்டில் மருவும்
கனலோ புனலோ கண்ணில் வழியும்
கதிரோ மதியோ விண்ணில் தவழும்!

தலைவன்:

விருந்தா மருந்தா உண்ட உணவு
அரும்பா மலரா கொண்ட உறவு
இருந்தால் எழுந்தால் மங்கை நினைவு
இதுதான் அவளால் வந்த விளைவு!