பக்கம் எண் :

268கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1

45. இரண்டு குழந்தை

ஐம்பதாண் டகவை யடைந்தனை யாகினும்
அம்புலி முகத்தின் அழகிலும் கொவ்வைப்
பழந்தூங் கிதழிற் படர்தரு நகையிலும்
குழந்தையின் பொலிவு குலவுதல் கண்டேன்;
தீதறி யுலகம் தெரியா திருந்தனை
சூதும் வாதும் யாதும் அறிந்திலை
யாதுநீ செய்யினும் பேதுறும் மகவே;
கடிந்துனை ஒருகாற் கழறினும் விழிநீர்
படிந்து சிற்றிளம் பாவை யாகுவை;
என்னுயிர்க் காதலி எவ்வகை நோக்கினும்
பொன்னுருக் குழந்தை போலுனைக் காண்குவென்
எனயான் மொழிந்தேன்; என்னுயிர்த் தெய்வம்
புன்னகை பூத்துப் “போதும் புகழ்ச்சி
என்னுளத் துறையும் இறைவ நீயும்
குழந்தை யுள்ளம் கொண்டனை யறிவேன்”
எனலும் நகைத்தேன் “இரண்டு போதும்
இனிமேல் வேண்டா” என்றனள்
கரும்பு மொழியில் குறும்பு கலந்தே!

09-04-1983