பக்கம் எண் :

நெஞ்சிற் பூத்தவை269

46. பள்ளிக்கு அழைத்தவள்

எடுப்பு

பள்ளிக்கு வாவென் றழைத்தவளே - முப்
பாலமு துண்ணென அளித்தவளே

- பள்ளிக்கு

தொடுப்பு

கள்ளைத்தான் பாலெனச் சாற்றினையோ? நின்
காதலிற் கள்வெறி ஏற்றினையோ?

-பள்ளிக்கு

முடிப்பு

காலடிப் பேரெழில் கண்டுமயங்கி - எழு
காலடிப் பாவையே உன்னைநெருங்க
நாலடிப் பாதையில் நீநடந்தாய் - உனை
நாடியே வாதையில் நான்கிடந்தேன்!

-பள்ளிக்கு

ஊட்டுவை காமமே என்றுநினைந்தேன் - நீ
‘ஓம்புக’ மெய்ப்பொருள்’ என்று நடந்தாய்
மீட்டுமுன் அன்பினை நாடி வளைந்தேன்
மேவிய நல்லறம் பாடியணைந்தாய்!

-பள்ளிக்கு