பக்கம் எண் :

முடியரசன் கவிதைகள்31

என்பெயர் மாருத வேகன் என்பர்
அன்பின் கிழத்தி ஆகுதி” என்று
வன்பால் அவள்கைம் மலரினைப் பற்றினன்;
“இணர்மண மாலை ஏற்று மகிழும்
மணம்பெறா முன்னர் மலருடல் தீண்டுதல்
குணமிகு செயலெனக் கூறார்” என்றனள்;
“யாழோர் மணத்தால் யானுனைக் கூடுவேன்
தோழீஇ” எனஅவள் தோள்தழீஇச் சென்று
பூம்புகார்த் தங்கிப் போகம் சுவைத்தனன்;

யாழும் வாழ்வும்

பெருமுழ வெங்கணும் திருவிழா அறைந்தன,
தெருவொலந் தோரணம் வாரணந் திகழ்ந்தன,
மகார்முதல் யாவரும் மனங்களி கூர்ந்தனர்.
புகார்நகர் விழாவிற் பொலிந்தது யாண்டும்
அலைமணற் கரையெலாம் நிலவினர் மக்கள்,
இளைஞர் துணையொடும் இன்னிசை பாடினர்.
குழலும் யாழும் கூடி இசைத்தன.
மழலைச் சிறுமகார் மணலில் ஆடினர்,
மாந்தர் ஒலியொடு மற்றிசை ஒலியும்
சேர்ந்து கடலொலி சிறிதெனச் செய்தது;
மாருத வேகன் மனத்தினில் மகிழ்ச்சி
சாருத லின்றித் தனிமையை நாடிச்
சிந்தனை முகத்தில் தேக்கின னாகி
நந்தின் சினைகள் சிந்திய ஒருபால்
புந்தியில் அலைகள் புரள இருந்தனன்;
“என்மனங் கவர்ந்தோய் யாதுற் றனைகொல்?
நின்முகஞ் சோர்வுறின் என்னுளஞ் சோர்வுறும்.
இந்திர விழாவில் வந்தோர் யாரும்
நொந்திலர், மகிழ்வைச் சிந்தையில் தேக்கினர்,
நாமுங் களிப்போம் வா”வென நீவிச்
சுதமதி யாழினைச் சுருதி கூட்டினள்;