என்னலும், இளையன் “ஏனுனக் கையம்? உலையில் காய்ச்சி உருக்கிய பொன்னால் மேற்றிசை வானை மெருகிடல் போல்நிறம் தீற்றிய கதிரோன் மறையும் செக்கர் வானெழில் காணுதி! வாட்டந் தவிர்தி! வீணில் ஐயுறின் விளைவன தீயவே” இங்ஙனம் ஆற்றியும் இளையோள் தெளிந்திலள்; “வானை மினுக்கி மறைவுறுங் கதிரென என்னை மயக்கி என்னலம் நுகர்ந்து மின்போல் மறைதல் நின்பால் நிகழுமோ என்னும் ஐயம் எழுந்ததென் உளத்தே; யாழோர் கூட்டமென் றென்னலம் உண்டனை கீழோர் நாட்டம் எனநிலங் கிளக்கவும், நம்பிய நானிவண் நரம்பறும் யாழென வெம்பவும், கைவிடல் கனவிலும் விழையேல்” இருவிழி கலங்க இயம்பினள் இங்ஙனம்; “சிறுமதி யுடையாய் செய்கையில் பொய்க்கும் குறுமனம் இல்லேன், கொண்டவள் தவிக்கக் காதல் பொய்க்கும் கயவனும் அல்லேன் காதல் இன்றேல் சாதல் இதுமெய்! தெய்வம் உண்டெனத் தெளிகுவை யாயின் செய்நம் காதல் மெய்யெனத் தெளிகுவை பெண்மதி பின்மதி! ஆம்இஃ துண்மை! கண்ணிழி நீர்துடை கலங்குதல் ஒழி” என் றுள்ளம் மாற்றி ஊக்கினன் சென்றான். பள்ளியில் மெல்லிய பஞ்சணை துயிலும் கள்ளவிழ் கோதை கனவுகண் டஞ்சி நள்ளிர வதனில் நடுங்கிப் பிதற்றினள்; தேற்றினன் தெளிந்தாள், துயிற்றினன் துயின்றாள்; பூவையும் புலம்பலும் காற்றுடல் வருடக் கண்மலர் அவிழ்ந்தாள் கதிரவற் கண்டாள் காதலற் காணாள் |