பக்கம் எண் :

34கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1

அதிர்ந்தனள் உள்ளம் அந்தோ பேதை!
ஓடினள் தேடினள் ஊரெலாந் தேடினள்!
வாடினள்; இரவொடு மாருத வேகன்
ஓடினன் என்பதை உணர்ந்தனள் தளர்ந்தனள்;
“கடவுளைக் காட்டிக் கழறினன் நம்பினேன்,
கடவுள் போலவன் கட்படாஅ தொழிந்தனன்,
வடவன் கூற்றை வாய்மைஎன் றெண்ணி
இடங்கொடுத் ததனால் இந்நிலை உற்றேன்,
மடவன் இவ்வணம் மாறினன், காதல்
நலமறி யாமகன் நயவஞ் சகனிவன்
குலமகன் அல்லன் கொடியன்! எங்கே
ஏகுவென் யானினி எங்ஙனம் வாழ்கேன்?
பெண்மதி பின்மதி என்று பேசினன்,
உண்மை உண்மை, உணரா தொழிந்தேன்.
வேக மாருதம் என்ன விரைந்தனன்,
போகிய மாருத வேகனுக் கப்பெயர்
ஒன்றும் பரிசென இன்றிங் குணர்ந்தேன்”
என்றெலாம் அரற்றி இருந்தனள் சுதமதி;

தந்தையும் மகளும்

சண்பை நகரோன் சதுர்மறை யாளன்
நன்மனை யிழந்த நரைமுதிர் கோசிகன்
தன்மகட் காணான் தனித்துய ரெய்தித்
தென்னங் குமரி நன்னீர் ஆட
நண்ணும் மாக்களொடு நாடினன் பெயர்வோன்
கடலொடு கலக்கும் காவிரி மூழ்கிய
வடமொழி யாளரொடு வருவோன் புகாரில்
பிழைமணப் பட்டஅப் பேதையைக் கண்டனன்;
மழையெனக் கண்ணீர் வடித்துத் தன்மகள்
உற்ற இடும்பை முற்ற உணர்ந்து
பெற்றவள் நிலைக்குப் பெரிதும் வருந்தித்
தன்பதி செல்லின் வன்பழி நேரும்