2. இயற்கை உலகம் அழகின் சிரிப்பு எண்சீர்விருத்தம் அலைகடலின் அப்புறத்தே ஓரக் கோட்டில் அடரிருளை அகற்றியபின் கிழக்கு வானில் கலையாத செந்நிறத்தைப் பூசி விட்டுக் காதலியைக் காணவரும் காத லன்போல் தலைகாட்டிக் கதிரவன்தான் சிரித்துக் காட்டும் தன்மையினில், மகிழ்வூட்டும் அழகு தன்னில் கலையழகு சிரித்துவிளை யாடக் கண்டு கழனிகளின் வரப்போரம் நடந்து சென்றேன் முழந்தாளிற் கையூன்றிக் குனிந்து நின்று முன்தானை எடுத்திடையில் இறுகக் கட்டிச் சுழன்றாடும் குழல்மாதர் கால்வ யிற்றுச் சோற்றுக்கு நாற்றுநடும் போது தன்னால் எழுந்தாடும் கையசைவில், வீட்டுக் காரன் ஏர்பிடித்துக் களைத்திருப்பான் என்று சொல்லி விழுந்தோடி உணவுகொண்டு வந்த பாவை விளையாடி உணவூட்டும் காட்சி தன்னில், நீர்சேந்தி நிறைத்தகுடம் இடுப்பில் வைத்து நெளியஒரு கைவீசிச் செல்லும் சிற்றூர் சேர்மாதர் மென்னடையில், குருவி காக்கை செழுங்கதிரைத் தின்னாமல் காப்ப தற்கு வார்தொடுத்த கவண்வீசிக் கூவுங் காலை வாயெழுப்பும் இசைக்குரலில், மண்ணை வெட்டி நீர்கட்டும் தொழிலாளி நீள்பு யத்தில் நின்றுநடம் செய்கின்ற அழகைக் கண்டேன் |