38 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1 |
கால்முளைத்த தாமரையின் மொக்குள் போலக் காட்சிதரும் குஞ்சுகள்தம் வாயில் கோழி வேல்மூக்கால் அன்புகலந் திரையை யூட்டும் வேளையிலும், வானத்து வீதி செல்லும் பால்மதியப் பெண்தனது விண்மீன் என்னும் பல்விரித்துச் சிரிக்கின்ற போதும், மண்மேல் கால்மடித்துத் தவழ்கின்ற குழந்தை பேசும் காலத்தும் நல்லழகின் சிரிப்பைக் கண்டேன். வெம்புலியின் பாய்ச்சல்தனில், வீரன் ஏந்தும் வேல்நுனியில், தோள்வலியில், படம்வி ரித்து வெம்பிஎழும் நாகத்தின் ஆட்டந் தன்னில், விரிகொம்பு மான்விழியில், தேனை உண்ணத் தும்பிஎழுந் தார்க்கின்ற முல்லைக் காட்டில்; தோகைவிரித் தாடுகின்ற மயிலி டத்தில், செம்பவழக் கொடிக்கடலின் அலைக்கூட்டத்தில் சேர்ந்திருக்கும் அழகெல்லாம் சிரிக்கக்கண்டேன் இங்கெல்லாம் சிரிக்கின்ற அழகு கண்டேன் இனியதமிழ் பேசுகின்ற மனிதன் வாழ்வில் பொங்கிவரும் அழகில்லை! உழைத்துண் டாக்கும் பொருளெல்லாம் பிறர்நுகரப் பெற்ற தாலோ தங்கள்குலம் வாழாமல் சுரண்டு வோரைத் தரைமட்டம் ஆக்கஎழும் எண்ணத் தாலோ மங்குமவன் முகத்தினிலே சிரிப்பும் இல்லை! மனிதரினம் விலங்கினமாய் வாழல் நன்றோ? மக்கள்நலம் பேணுகின்றோம் என்று சொல்லி மணிப்பீடம் ஏறிவிட்டோர் மதத்தின் பீடம் தக்கதுணை என்றெண்ணி அயர்ந்து விட்டார்; தறிகெட்டுத் திரிகின்றார்; மேடை ஏறிக் கொக்கரித்தல் ஓயவில்லை; சட்டத் தாலும் கொடுமைகளும் மாயவிலை; அறிவு மாய்க்கும் அக்குணத்தார் ஆட்சியிலே அழகும் இல்லை ஆதலினால் வாழ்க்கையிலே சிரிப்பும் இல்லை! |