40 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1 |
இயற்கைத் தாய் அறுசீர்விருத்தம் புனல்நிறைந்த தடமலர்கள், படர்கொடியிற் பூத்தமலர், கோட்டுப் பூக்கள் இனையபல மலர்நாறும் மணமானாள்; இருநிலத்துப் பொருள்கள் தோறும் மனங்கவர்ந்து நிறைந்திருக்கும் எழிலுருவம் அவளுருவாம், மலையில் வாழ்வாள். எனைமகனாப் பெற்றெடுத்தாள் முருகென்னும் எழிற்பேரும் உடையாள் வாழ்க! அழுக்காறாம் எறும்பூரும், பொய்மைஎனும் அறுகால்சேர் ஈக்கள் மொய்க்கும், இழுக்கேறா நல்லறிவுப் பசிதோன்றும் இத்தனையும் தாங்க ஏலா தழுதிடுவேன்; விரைந்தோடி என்பால்வந் தன்பென்னும் முலைசு ரந்த பழுதில்லா முப்பாலை ஊட்டிடுவாள்; பார்புரக்கும் தாய்மை வாழ்க! *தென்றலெனும் தொட்டிலிலே எனைக்கிடத்தித் தேன்நுகர மலர்கள் தோறும் சென்றிருந்து தமிழ்பாடும் வண்டொலியால் செவிகுளிரத் தாலே தாலோ என்றினிய தாலாட்டித் துயிற்றிடுவாள்; எழுந்தழுதால் ஆறு காட்டிக் குன்றிருந்து வீழருவி, கடல்காட்டிக் கொஞ்சிடுவாள் மலர்கள் காட்டி.
* இப்பாடல், சாகித்திய அகாதமியால் இந்திய மொழிகள் அனைத்திலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. |