பக்கம் எண் :

முடியரசன் கவிதைகள்41

இளங்காலை இருட்கதவம் திறந்துநோக்கி
        இன்னுமெழ வில்லை யோஎன்
றுளஞ்சினந்து முகஞ்சிவந்து கதிர்க்கரத்தால்
        உறக்கத்தில் எழுப்பு வாள்தாய்,
குளறிஎழுந் தன்னவளை வைதிடுவேன்,
        கோணாமல் அன்பு கூர்ந்து
முளரிமுகங் காட்டிடுவாள் முத்தமிழால்
        வைதோர்க்கும் வாழ்வே தந்தாள்;

விடிபொழுதில் ஆறென்னும் கைநீட்டி
        விளையாடிக் குளிக்க வா! வா!!
பிடிவாதம் செய்யாதே என்றழைப்பாள்,
        பேசாமல் நானி ருந்தால்
இடியொலியால் உறுத்ததட்டி மழைத்துளியால்
        எனைநனைத்து நீரும் ஆட்டிக்
கொடிநிகர்த்த மின்னொளியால் நகைத்திடுவாள்,
        கூத்தாடி நான்கு ளிப்பேன்.

குளிர்மிகுந்து நடுக்கமுறின் மனந்தளர்வாள்
        கொணர்ந்திடுவாள் ஞாயி றென்னும்
ஒளிநெருப்பை! குளிர்காய்வேன், அதன்பின்னர்
        மலர்க்காட்டுள் ஓடி ஓடி
நளிமலருள் நிறைமணத்தை வாரிவந்து
        நான்மகிழ உடலிற் பூச
அனிதென்றல் உருவோடு வருவாள்தன்
        அன்பினைத்தான் உரைத்தல் ஆமோ?

படித்திடுக எனச்சொல்லிக் குயிலினங்கள்
        பசுங்கிளிகள் இவற்றைத் தந்தாள்;
பிடித்தவற்றைப் பார்க்கையிலோர் அறங்கண்டேன்;
        ‘பேசுமொழி சொந்த மேயாம்
அடுத்தவற்றின் குரலல்ல நீயுமுன் றன்
        அனைமொழியால் பேசு! பாடு!!
தடுப்பவர்யார்? என்றன அவ் வேடுகள்தாம்
        தாயேதாய் மொழியே வாழ்க!