42 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1 |
விண்ணரங்கிற் கருமுகிலாம் திரைநீக்கி, விதவிதமா வானம் பாடி பண்ணிசைக்க, ஒளிவீசிப் புடைசூழும் பல்வகையாம் மீனப் பெண்கள் கண்சிமிட்டி உடனாட, முழுநிலவுக் காரிகையும் நடனம் ஆட மண்ணகத்து மகவெல்லாம் களிகொள்ள மனம்வைத்தாள் என்றன் அன்னை வளைந்துள்ள வெண்ணிறத்துப் பிறைநிலவை வானத்தில் கப்பல் என்று தளைந்துள்ள முகிலலையின் நடுவிடத்தே தவழ்ந்தோடச் செய்தாள்; இன்பம் விளைந்துள்ளம் களிகூரப் பகலெல்லாம் விளையாட இருட்பு லத்தைப் பிளந்தெழும்பும் கதிரவனைப் பந்தெனவே பிள்ளைஎனக் களித்தாள் அன்னை கடற்கரையில் விளையாட இடந்தந்தாள்; கலகலத்த இரைச்ச லோடு படர்ந்தலைகள் கரைநோக்கி விளையாடப் பாய்ந்துவரும், நானும் செல்வேன், மடங்கியொடுங் கிக்கடலுள் எமைக்கண்டு பிடியென்று மறைந்து போகும் அடங்கிடுவேன்; உடன்சிரித்து மற்றோர்பால் அலையெழும்பும், அயர்ந்து போவேன். மலையுறைவாள், அகங்கசிந்து நிலவுலகில் மக்கள்பசித் திருப்ப ரென்று நிலைகலங்கிக் கீழிறங்கி ஆறென்று நெடுகநடந் தெவ்வி டத்தும் கலைகுலுங்கக் கால்களினால் ஓடிமலர்க் கண்மலர வயலிற் பாய்ந்து, குலைகுலுங்கும் கதிர்க்கையால் உணவூட்டிக் குறைநீக்கி மகிழ்வாள் அன்னை. 11 (குன்றக்குடி விசாகத் திருநாள் கவியரங்கில் `முருகன் என் தாய்’ என்ற தலைப்பில் பாடப் பெற்றது.) |