பக்கம் எண் :

44கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1

சுடர்விட்டுக் காட்டுகின்ற கதிரோன் தோன்றச்
        சுருக்கவிழ்ந்து சிரிக்குமுகத் தாம ரைக்குள்
கடன்பட்ட மாந்தரிடம் வட்டி கேட்கக்
        கடைதோறும் புகுந்துவரும் கணக்க னைப்போல்
இடம்விட்ட மலர்தோறும் சென்று தேனை
        இனிதுறிஞ்சி இசைபாடிச் செல்லும் தும்பி
அடைபட்டுக் கிடக்கவெனக் குவிந்து கொண்ட
        அல்லிமலர்க் கூட்டத்துள் அழகு கண்டேன்.

விண்பரப்பில் மீன்நடுவே ஒளியைக் கான்று
        மென்னடையில் நிலவுப்பெண் ஊர்ந்து செல்ல,
மண்புரக்கும் வேலியென அமைந்த வேலை
        மடிந்துமடிந் தலைஎழுப்பிக் கரையில் மோத,
மண்பரப்பில் எழுப்பியுள வலைஞர் சிற்றில்
        மனைவியின்பால் விடைபெற்றுத் தோணி ஏறிக்
கண்மறைக்கும் நெடுந்தொலைவு கடலுள் ஏகிக்
        கடும்புயலும் சுறவினத்தின் வாயும் தப்பி,

மீன்பிடித்துக் காதலன்தான் மீள்தல் கண்டு
        மீள்வாரோ? மீளாரோ? எனத்த ளர்ந்த
மான்படித்த பார்வையினாள் அகத்துள் பொங்கும்
        மகிழ்ச்சிஎல்லாம் வெளிக்காட்டும் முகத்தி டத்தே
தான்நடித்தாள் எழிலணங்கு; தந்தை முன்னர்த்
        தள்ளாடி நடந்தோடி அப்பா! என்று
தேன்வடித்த சொல்லாலே குழந்தை கூவத்
        திரும்பினவன் முகத்தகத்தும் எழிலைக்கண்டேன்.

கொடிதாங்கி உரிமைப்போர்க் களத்துச் சென்ற
        குமரனவன் உயிர்நீங்க ஆள்வோர் தந்த
அடிதாங்கித் தலையிழிந்து கொட்டும் செந்நீர்,
        அடிமைஎனும் சிறுமையினை அழிப்பான் வேண்டி
நெடிதோங்கும் பிறனாட்சி தொலைக்கும் போரில்
        நின்றிருந்த பெரியோன்தன் அகன்ற மார்பு
வெடிதாங்கிச் சிந்துகின்ற குருதி, யார்க்கும்
        விளங்காத எழில்காட்டக் கண்டேன் கண்டேன்.