“மனவிருளை அகற்றிடுக சிந்தித் தாய்க! மறைப்பின்றி உரைத்திடுக! இங்ஙன் செய்யின் நனவுலகில் மனிதரென வாழ்வோம்!” என்று நவின்றவனை “அடைத்திடுக கொடுஞ்சி றைக்குள்” எனவுரைத்துக் கொடுநஞ்சைக் கொடுத்தான் வேந்தன் “எனதுயிரிற் பெருங்கொள்கை விடுதல் ஏலேன் சினவுயிரை விடுதல்எனக் கெளிதாம்” என்று செப்பிஅவன் குடித்தெறிந்த கிண்ணத் துள்ளே நாட்டுக்குச் செய்தபெருந் தொண்டுக் காக நரிக்குணத்தர் அவற்களித்த தூக்கு மேடை காட்டுகின்ற சுருள்கயிற்றில், இறந்து பட்ட காளையவன் சவக்குழியில், எலும்புக் கூட்டில், நாட்டிற்காச் செக்கிழுத்து மெலிந்த தோளில், நல்லதமிழ் நாட்டெழுந்த இந்திப் போரில் தேட்டாளர் முகங்களிலே அறுத்த றிந்த திருத்தாலிக் கயிற்றில்நான் எழிலைக் கண்டேன். 9 (காரைக்குடி அழகப்பா கலைக்கல்லூரியில் திரு. சா. கணேசன் தலைமையில் பாடப்பெற்ற பாடல்.) |