46 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1 |
நிலவு எண்சீர் விருத்தம் ஒளிமிகுந்த குளிர்நிலவே! உன்னைக் கண்டேன் உள்ளமெல்லாம் உவகையுற இன்பங் கொண்டேன்; களிமிகுந்த காதலருக் கின்பத் தோணி! கடைந்தெடுத்த வெண்முத்தம் நின்றன் மேனி; தளிர்போலும் குழவிகளின் கதறல் நீக்கும் தாயர்தமக் குதவிடுவாய்! உலகைக் காக்கும் எளிமைமிகு தொழிலாளர் அயர்ந்த போதில் எழுந்துமுகம் காட்டிமகிழ் வூட்டும் மாது! ஒருபொழுதும் வயிறார உண்ணல் காணா துயிர்நிற்க இரந்துண்ணும் ஏழை, திங்கள் வருபொழுது அரைவயிறு மட்டும் உண்டு வருந்துகிற உழைப்பாளி, நிறைய உண்ணும் பெருவயிற்றுப் பணக்காரன் யாவ ரேனும் பிழையாது நிலவளித்து மாட மீதும் சிறுகுடிசை மீதுமொளி வீசி இன்பம் சேர்க்கின்ற பொதுவுடைமை ஆட்சி கண்டேன். *பொதுவுடைமை ஆட்சியினை இரவுப் போதில் புரிகின்ற முழுமதியே! உன்னைக் கண்டு மதுவுண்ட வண்டானேன்; இன்பப் பாடல் வாய்குளிர மனங்குளிரப் பாடி நின்றேன்; புதுவுலகம் விரைவினில்நாம் காண வேண்டின் பொலிவுபெறும் முழுமதியர் ஆட்சி வேண்டும் இதுவுண்மை எனநினைந்தேன்; களங்கம் உன்பால் இருக்கின்ற தெனஒருவன் இயம்பி னானே!
* இப்பாடல், சாகித்திய அகாடமியால் இந்திய மொழிகள் அனைத்திலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. |