பக்கம் எண் :

முடியரசன் கவிதைகள்47

நிறைமதியர் நிலவுலகம் நிலைக்குங் காறும்
        நீள்புகழால் ஒளிபரப்பு வார்,இவ் வுண்மை
நிறைமதியம் இரவிங்கு நிற்குங் காறும்
        நெடுங்கதிரால் ஒளிபரப்பிக் காட்டும்; மேலும்
குறைமதியர் புகழெல்லாம் வெளிப்ப கட்டாய்க்
        குறைந்துவிடும் மிகவிரைவில் என்ற உண்மை
குறைமதியம் சிறுநேரம் பகட்டி வானிற்
        கூத்தாடி மறைந்துநமக் கெடுத்துக் காட்டும்

மதியுடையார் பேசுவதைக் கேட்டல் நன்று
        மாண்புவரும் எனக்குழுமும் விண்மீன் கூட்டம்;

அதுமகிழ வானத்து மேடை ஏறி
        அம்புலியார் சொற்பொழிய, முகிலன் ஓடி
எதிரியெனக் கூட்டத்துள் ஒளிம றைத்தான்,
        இடியிடித்தான், குழப்பத்தை ஆக்கி விட்டான்;
இதிலென்ன கண்டனனோ? மதியர் நாளை
        ஏறாமல் இருப்பாரோ மேடை மீது?

நிலவணங்கே! உனைக்கதிரோன் கூடுங் காலை
        நீலமுகிற் குழல்தளரக் கட்ட விழ்ந்து
பொலபொலவென் றுதிர்ந்தநறு மலர்கள் தாமோ
        பூத்திருக்கும் விண்மீன்கள்? வானம் நீங்கள்
நலம்நுகரும் பஞ்சணையோ? கதிரோன் எங்கே
        நடந்துவிட்டான்? உதிர்மலரை மீண்டும் சேர்த்துக்
குலமாலை யாக்குதற்கு மின்னல் நாணைக்
        கொண்டுவரச் சென்றனனோ? கூறாய் தோழி!

வானத்துத் தாயென்பாள் கதிரோன் என்ற
        வம்படித்து விளையாடித் திரியும் சேயைச்
`சீனத்துச் சிறுகிளியே! செங்க ரும்பே!
        செய்யாதே வீண்வம்பு, புசிக்க வா’வென்
றேனத்துச் சோறிட்டாள்; சிறுவன் ஓடி
        எற்றிவிடச் சிதறியவெண் சோறு போல
மீனத்துக் குழுவெல்லாம் விளங்கும்! வீழ்ந்த
        வெள்ளித்தட் டாமென்ன நிலவு தோன்றும்.