பக்கம் எண் :

முடியரசன் கவிதைகள்49

காற்று

அறுசீர் விருத்தம்

இரவலர்கள் எவரேனும் வருவாரோ
        என்றஞ்சிக் கதவ டைக்கும்
புரவலர்கள் சாளரத்துக் கதவுதனைப்
        பூட்டாது திறந்து வைத்து
வரவுரைகள் கூறுகின்றார் காற்றுக்கு;
        வரவிலையேல் பணத்தை வீசி
இரவுபகல் மின்விசிறி கொண்டவர்கள்
        எப்பொழுதும் சுழற்று கின்றார்

செலவழித்துப் பெற்றாலும் இயற்கைமணம்
        சேர்காற்றைப் பெற்றிட் டாலும்
இலவளித்த பஞ்சணையார் மென்காற்றில்
        இழைந்திருக்கும் சுகத்தை எள்ளின்
அலகனைத்தும் அறிவாரோ? சுரங்கத்தில்,
        ஆலைகளில், உலைக்க ளத்தில்,
பொலபொலக்க உடல்வியர்க்க உழைப்பவரே
        பொலிநலத்தைக் காண்பா ராவர்

குளிர்நிலத்தில் மலர்ச்செடியில் உராயுங்கால்
        குளிர்மணத்தை வீசும் காற்று;
வெளியிடத்திற் சுடுநிலத்தில் வரும்பொழுது
        வெப்பத்தை வீசிச் செல்லும்;
அளியகத்தே மிகுசான்றோர்ச் சார்பவரும்
        அறநெறியர் ஆவர்; தீமை
நெளிமனத்தர் தமைச்சார்வோர் இவ்வுலகில்
        நேர்மையிலா வழியே சார்வர்