பக்கம் எண் :

  

வாழையடி வாழை
I

தமிழ் ஒரு கவிதைப் பண்புள்ள மொழி; பாவலர்தம் நாவிலே பண்வளர்த்த மொழி. உலகிலே கவிதை பாடுவதற்கு மிக எளிதில் வரும் மொழி தமிழ் ஒன்றுதான்.

ஆனால் அ, ஆ அறிந்தவரெல்லாம் அறிஞர்களாகவும், க, கா தெரிந்தவர்களெல்லாம் கவிஞர்களாகவும் ஆக முடியுமா? உயர்ந்த கருத்துக்களின் ஊற்றாகி, மொழிப் புலமையின் கரைகண்டு, கவிதை அருவி பாய்வதன்றோ கவிஞன் உள்ளம். சுருங்கச் சொன்னால் கவிதை பாடுவது குழந்தை பெறுவது போல, கருச் சிதையாமல் பிறக்க வேண்டும். பிறந்த பிள்ளை கூன் குருடு நீங்கியதாக இருக்க வேண்டும். `இவன் தந்தை என்னோற்றான் கொல்’ என வையகம் வாழ்த்தவும் வேண்டும்.

நாட்டன்பை அடகு வைத்து, மொழிப் புலமைக்கு முற்றுப் புள்ளி வைத்து, எண்ணியதெல்லாம் கருத்து, எழுதியதெல்லாம் கவிதையென்று கூறி, விலைபோகாக்கைச் சரக்கை வீதி வலம் வந்து விற்பதற்குப் பேரம் பேசுகிறார்கள் சில “புதுமைக்” கவிஞர்கள். புதுமைப் பித்தன் சொன்னதுபோல் மனைவி சோரம் போய்ப் பெற்ற பிள்ளையைச் சொந்தப் பிள்ளையென்று கொண்டாடுபவர்கள் கவிதை உலகிற் பெருகிவிட்டார்கள். பிறர் கருத்தை திருடியும் பழங்கருத்தைத் திருப்பியும் எழுதிப் பிழைக்கிறார்கள். இந்தக் “கவிதா மேதை”கள். பாரதியும், பாரதிதாசனும், கவிமணியும் பிறந்த நூற்றாண்டிலே இத்தகைய “கவிதா விற்பன்னர்”களும் பிறந்து தருக்கித் திரிவது கண்டு வியப்பன்று, வேதனை உண்டாகிறது மக்களுக்கு.

இத்தகைய சூழலுக்கிடையேதான் கவிஞர் முடியரசனின் கவிதைகளும் வெளிவருகின்றன. அவை மக்கள் மன்றத்திலே