பக்கம் எண் :

முடியரசன் கவிதைகள்51

நீர்கொண்ட மேகத்தைக் கடலினின்று
        நெடுந்தொலைவு உந்தி வந்து
பேர்கொண்ட மலைப்பாங்கிற் சேர்ப்பதுவும்
        பின்னுமதைக் குளிரச் செய்து
நீர்கொட்டச் செய்வதுவும் காற்றன்றோ?
        நீணிலத்துச் சான்றோர் என்ற
பேர்பெற்றோர் அடுத்தடுத்து நன்மைகளே
        பேணிவந்து செய்தல் காட்டும்;

வடக்கிருந்து வருவாடை வாட்டுவதும்
        தெற்கில்வரும் தென்றல் இன்பம்
கொடுப்பதுவும் காட்டுமொரு பேருண்மை,
        கொடுமையிலாத் தமிழ் நாடும்
வடக்கிருந்து வருபவையால் துயருழந்து
        வாடுவதும் தெற்கோ இன்பம்
படைப்பதுவும் நாடறியும், உயர்வாம்இப்
        பண்புணர்த்தும் தென்றல் வாழ்க. 9