52 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1 |
ஆறு52 எண்சீர் விருத்தம் பகல்முழுதும் வெயில்காய்ந்து மேற்பால் சேரும் பகலவனை வழியனுப்பிக் கீழ்ப்பால் திங்கள் முகமெழுப்பும் வேளைதனில் மகிழ்வு கூட்ட முரணில்லா யாழெடுத்தாள் காதல் நல்லாள்; முகம்சுழித்தேன், `ஏனென்றாள்?’, `கவிதை யாக்க முயல்கின்றேன் நீபாட முனைதல் நன்றோ? தகவிதுவோ?’ எனவுரைத்தேன்; யாழை வைத்தாள்; `தளிர்க்கரத்தாய்! என்னுடன்வா’ என்றழைத்தேன். அவளுடன்நான் கற்பனையில் மிதந்து சென்றேன் `அத்தான்! ஓர் ஐயமுண்டு, செய்யுள் யாக்கக் கவலைதரும் இலக்கணமேன் வேண்டும்?’ என்றாள்; `காரிகையே! ஆற்றுக்குக் கரையேன் வேண்டும்? சுவர்போலும் கரையிலையேல் ஆற்றின் தன்மை என்னாகும் சொல்லிடுக! ஊர்பாழ் அன்றோ? அவமின்றி மொழிவிளங்கக் கவிதை என்னும் ஆற்றுக்கும் இலக்கணமோர் கரையே யாகும்;’ பாவலன்தன் கவிப்பொருளைப் பாடுங் காலை பாட்டகத்தே இலக்கணமும் அமைதல் வேண்டும் ஆவலுடன் கவிபுனைவோர் இலக்க ணத்தை அருகில்வைத்துப் பெருங்கவிஎன் றெண்ணிக் கொண்டு தாவுகின்றார் பாடுதற்குத் தவறி வீழ்ந்து, தகுபுலவோர் இலக்கணத்தைப் புதைத்து விட்டுக் கூவுகின்றார் ஒப்பாரிக் குரலெ டுத்து; கொடுமையிது! கவிஞன்தன் மரபும் அன்று!’ |