பக்கம் எண் :

முடியரசன் கவிதைகள்53

“பண்டிதர்வே றென்னசொல்வார்? தமிழை எங்கும்
        பரவவிட மனமில்லார்” எனந கைத்தாள்;
‘அண்டவந்த பிறமொழியால் தமிழை மக்கள்
        அயர்த்தடிமை ஏற்றிருந்த போது காத்துக்
கொண்டிருந்த பண்டிதனைக் குறைசொல் கின்றாய்!
        குறைமதியைத் தலைக்கொண்டாய்! கவிஞனும் யார்?
பண்டிதன்தான், உளறாதே! மொழியாம் ஆற்றில்
        படிந்தெழுந்தால் உன்மடமை கரைந்து போகும்;

சிறுநெஞ்சில் ஊற்றெடுத்து மேனி எங்கும்
        செழிப்பதற்குக் கிளைத்தோடும் குருதி யைப்போல்
குறுகிடத்தே தோன்றிப்பின் நாட்டில் செல்வம்
        கொழிப்பதற்குக் கிளைத்தோடும் ஆறு, வெற்பில்
விறுவிறுக்க அருவியெனப் பாறை மீது
        வீழஅது கல்லாகி, ஓடஓடக்
குறுமணலாய், ஒன்றுதிரிந் தொன்றாம் என்ற
        குவலயத்தின் பரிணாம உண்மை காட்டும்;

மேற்றிசையில் செந்நிறத்தைக் கதிரோன் பாய்ச்சும்
        வேளையிலே அவ்வொளியை ஆறு தன்மேல்
ஏற்றுனது மெய்வண்ணம் காட்டி, ஒவ்வோர்
        இடங்களிலே நெளிந்தோடி இடையைக் காட்டி,
நாற்றுநிறை வயல்களுக்குப் பிரிந்து சென்று
        நாள்வருவாய்க் கால்காட்டி, ஓடை மீது
காற்றுரசச் சலசலவென் றோடுங் காலை
        களிநடஞ்செய் காற்சதங்கை ஒலியைக் காட்டி

கரையோரம் அலைக்கையால் வாரி விட்ட
        கருமணலால் சுருள்கூந்தல் காட்டி, வெள்ளை
நுரைசேரும் புனல்தள்ளும் சங்கி னத்தின்
        நுண்சினையால் பல்காட்டி, ஓடி ஓடி,
இரைதேடும் கயல்மீனால் கண்கள் காட்டி,
        இறுமாந்து செல்லுங்கால் தன்பால் செந்தா
மரையின்றி முகங்காட்ட முடியா ஆறு
        மாய்வதற்குக் கடல்நோக்கி ஓடு தல்பார்!