பக்கம் எண் :

54கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1

*ஊர்மக்கள் வெறுத்தொதுக்கும் கழிநீர் எல்லாம்
        ஓடிவந்து கலந்தாலும் மாசு நீங்கி
ஊர்விட்டு நீங்குகையில் தூய்மை யாகி
        ஊர்ந்துசெலும் ஆறுகண்டு தமிழைக் காண்பாய்!
சார்பற்றுத் தனித்தியங்க வல்ல என் றன்
        தமிழ்மொழியில் பிறமொழிகள் கலந்த போதும்
நேர்வுற்று மாசின்றி இயங்கும் பண்பை
        நினைப்பூட்டும் ஆற்றுக்கு வாழ்த்துக் கூறு!

வாழ்த்தென்று கூறுகையில் பழைய எண்ணம்
        வாட்டுதடி! நம்முன்னோன் ஆட்ட னத்தி,
காழ்த்தபகை நீக்குவிறல் சோழன் பெற்ற
        கனிஆதி மருதியுடன் ஆற்று வெள்ளம்
ஆழ்த்திவிடும் என்றுணரா தாடச் சென்றான்;
        அவள்கண்ணீர் ஆறாக அவனைக் கொன்ற
பாழ்த்துறைபார்! இலக்கியமாம் ஏட்டுச் செல்வம்
        அழித்தொழித்த பதினெட்டாம் பெருக்கை யும்பார்!

கடிதோடும் வெள்ளத்தால் ஊரின் செல்வம்
        கரையின்றி அழித்தொழியக் கண்டு நொந்து
முடியரசன் கரிகாலன் மக்கள் வாழ்வு
        முந்துறவே இருமருங்கும் எழுப்பித் தந்த
நெடிதோங்கு கரைகளைப் பார்! அவனின் றில்லை
        நிலைத்துநின்ற தவன்பணியே; ஆத லாலே
படியாள்வோர் புவியாட்சி மாறும் உண்மை
        படித்திடுக! பயனுள்ள செயலே செய்க!

உருக்குலைய உழைத்துழைத்துச் செல்வம் இல்லா
        உழைப்பாளர் வாழ்வினைப்போல் வறண்டு தோன்றும்
பெருக்கில்லாக் காட்டாறு காண்பாய்! ஈகை
        பேணாத பெருஞ்செல்வர், மிடியால் வாடி
இருப்பவர்க்குப் பயனில்லா தொழிதல் போல
        எரிகதிரால் வதைந்தவர்க்கு நிழலொன் றீயா
திருக்குமரம் கரைகளிற்காண்! வறுமை யுற்றோன்
        இளமைஎன வதங்குசெடி கொடிகள் காண்பாய்!


* இப்பாடல், சாகித்திய அகாடமியால் இந்திய மொழிகள் அனைத்திலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.