கடற்கணவன் எங்குள்ளான் என்று தேடிக் கதறிக்கொண் டோடுகின்ற ஆற்றுப் பெண்ணாள் தொடக்கண்டு பெருங்கடலோன் அலைக்கை நீட்டித் தோள்தொட்டான், மகிழ்வுற்றாள், பிரிவுத் துன்பம் விடக்கண்டாள், ஒன்றாகக் கலந்து விட்டாள்; வேறிடத்தே பிறந்துளநீ அறியா என்பால் கடைக்கணித்துக் கலந்துவிட்டாய்! ஆறும் எங்கோ உருவெடுத்தும் கடலோடு மணத்தல் காண்பாய்! முப்பதுநாள் தமிழ்சொல்லிப் பள்ளிக் கூட முதல்வர்தரும் ஊதியத்தைக் கடனுக் கெல்லாம் ஒப்படைத்துப் பதினைந்து நாள்கள் ஓட்டி ஒழிந்தசின்னாள் என்செய்வேன் என்ற எண்ணம் கப்பிடநீ அருள்சுரந்துன் அன்னை தந்த காப்பளித்துக் காப்பளித்தாய்! அதுபோல் வானம் தப்பியதால் பெருக்கற்றும் ஊற்று நீரால் தரணியினைக் காக்கின்ற ஆறு காண்க! மலைமீது தோன்றிப்பின் அருவி யாக மன்னர்பகைப் போர்முரசம் என்ன ஆர்த்து, நிலையாமல் ஓடிப்போய்க் கரையே யில்லா நீர்க்கடலில் மறைகின்ற ஆறு கண்டேன்; உலையாத உண்மைகண்டேன்; உலகில் தோன்றி உருப்பெற்ற பொருள்ஒருநாள் மறைதல் உண்மை கலைமானே! மறைவதன்முன் மக்கள் வாழ்வைக் காக்கின்ற ஆற்றைப்போல் கடமை செய்க! கிளர்ச்சிசெயும் தொண்டர்களின் உணர்ச்சி வெள்ளம் கெடுவழியில் செல்லாமல் தடுத்து நன்கு வளர்ச்சிபெறச் செய்கின்ற தலைவன் போல வருவெள்ளப் பெருக்கனைத்தும் பாழ்ப டாமல் அளப்பரிய நன்மைசெயத் தடுத்து நிற்கும் அணைக்கட்டின் அழகைப்பார்! மனிதன் ஆற்றல் விளக்குகிற செயலதுவாம்; இயற்கை எல்லாம் வென்றாளும் மனிதர்திறம் என்னே! என்னே!! |