பக்கம் எண் :

முடியரசன் கவிதைகள்57

கடல்

அறுசீர்விருத்தம்

கவலையொடு நின்பால்வந் தமர்ந்திருக்கும்
        கடன்பட்ட மாந்தர் தம்மைத்
திவலையுடன் அலையெழுப்பி அக்கவலை
        தீர்க்கின்றாய் காதல் வாழ்வில்
தவழ்கின்ற இளைஞர்க்கும் மணங்கொண்டார்
        தமக்குமொரு சேர இன்பம்
உவக்கின்ற படியெல்லாம் கொடுக்கின்றாய்
        உவர்க்கடலே இன்னும் கேட்பாய்!

தங்கத்தைப் பவழத்தை ஒளிமுத்தைத்
        தளிர்க்கரும்பை நெல்லை எல்லாம்
துங்கத்தன் கைநீட்டித் தருகின்ற
        தூயதமிழ் நாட்டை விட்டுச்
சிங்கத்தை நிகர்தமிழர் கூலிகளாய்ச்
        சீர்கெட்டுச் செல்லு கின்ற
வங்கத்தைக் கண்டேயோ பொங்குகிறாய்?
        வாய்திறந்து கத்து கின்றாய்?

எத்தனையோ அருநூல்கள் செல்லார்கட்
        கிரையாக்கி விட்டோம், மேலும்
பித்தரைப்போல் மூடரைப்போல் பதினெட்டாம்
        பெருக்கென்றும் ஆற்றி லிட்டோம்,
இத்தனையும் போதாமல் சங்கத்தில்
        இருந்தவற்றை நீயும் கொண்டாய்!
கத்துதிரைப் படையெழுப்பி ஏனின்னும்
        கரைநோக்கி வருகின் றாய்நீ?