பக்கம் எண் :

58கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1

சங்கத்து நிலவியநல் இலக்கியத்தை,
        சகமெல்லாம் புகழ்ந்து போற்ற
வங்கத்து வணிகத்தால் ஓங்குபுகார்
        வளமிக்க நகரை, எங்கள்
சிங்கத்தை நிகர்பன்னீர்ச் செல்வத்தைச்
        செத்தொழியச் செய்தாய்! அந்தோ!
கங்கொத்தும் அலைகடலே! எமையிங்கு
        கலங்கிமனம் இரங்க வைத்தாய்

அன்றிழைத்த தீமையெலாம் போதாவென்
        றாவினங்கள் உயிர்போய் மாள,
நின்றிருந்த உயர்மரங்கள் வீடெல்லாம்
        நிலைவீழ, மக்கள் தம்மைக்
கொன்றழித்து நாகையினைச் சுவைத்தாயோ?
        கொழிதரங்கம் பாடி என்ன
இன்றிருக்கும் ஊரினையும் அலைக்கையால்
        இழுப்பதற்கோ சென்றாய் அங்கே?

நெய்தலெனப் பெயர்சூட்டி இரங்கலென
        நினக்குரிமைப் பொருளும் தந்த
செய்கையது நன்றுநன்று! அழித்தழித்தே
        இரங்கியழச் செய்தாய்! அந்தச்
செய்கையினை மறந்துவிட்டோம் நீஎமக்குச்
        செய்ந்நன்றி நினைத்த தாலே;
செய்வளர முகிலுக்கு நீர்கொடுக்கும்
        சிறப்புனது நன்மை அன்றோ!

கடற்பரப்பில் அலைஎழும்ப நீர்பிளந்து
        கப்பல்விரைந் தோடுங் காலை
அடக்குமுறை ஆங்கிலத்தார் அரசெதிர்த்த
        சிதம்பரப்பேர் அண்ணல் தெற்குக்
கடற்பரப்பில் கலம்விட்ட நினைவெழுந்து
        கண்ணெதிரே தோன்றும்; இன்னும்
விடக்காணோம் தமிழ்க்கலங்கள் நாட்டுணர்வு
        விட்டனரே எனவும் தோன்றும்.