உன்னிடத்தே முத்துண்டு பவழமுடன் உணவாகும் மீனும் உண்டு; பொன்கொழிக்கும் கப்பல்களைப் பாழாக்கும் பொல்லாத சுறவும் உண்டு; மன்னிலத்தும் அப்படித்தான் மக்களுக்குள் வாழ்வழிக்கும் திமிங்கி லங்கள், கன்மனத்துச் சுறவினங்கள், நல்லொளியைக் காட்டுகிற முத்தும் உண்டு. உலகுக்கோர் பொதுவுடைமை நீயென்ற உண்மையுணர்ந் திருந்தும் சில்லோர் கலகத்தார் எனதுகடல் உனதுகடல் காணென்று பூசல் செய்வார்; விலகத்தான் கோடுண்டா! குறியுண்டா? வீணாக மக்கள் யாரும் உலகத்துப் பொருளெல்லாம் தமதென்றே ஒற்றுமையை மாய்க்கின் றாரே! கற்றுணர்ந்த சான்றோரின் உள்ளம்போல் கடலேநீ ஆழம் கொண்ட பெற்றியுணர்ந் தாழிஎன்றார்; யாதும்மூர் பிறரெல்லாம் கேளிர் என்ற பற்றுடைய தமிழினத்தார் பரந்தமனப் பான்மையெனப் பரந்து நிற்கும் ஒற்றுமையைக் கண்டன்றோ எம்முன்னோர் உனைப்பரவை என்று சொன்னார் *விளங்காத மொழிபேசும் என்மகவு விளையாடும் பொழுது மண்ணில் மழுங்காத சிறுவிரலால் கீறிவிடும் வளைவுகள்போல் கரையில் நண்டு ஒழுங்காக அமையாமல் ஓடியோடிக் கோலமிடும்; ஆளைக் காணின் இளங்காளை முன்வந்தால் நாணமுறும் இளையவள்போல் மறையும் ஓடி
* இப்பாடல், சாகித்திய அகாடமியால் இந்திய மொழிகள் அனைத்திலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. |