மயிலே அறுசீர்விருத்தம் விண்ணுக்குப் பொலிவூட்டும் பன்னிறங்கள் விளையாடும் தோகைக் கண்ணின் எண்ணிக்கை எத்தனைபார்! அழகைத்தான் என்னென்பேன்! ஒலிக்கும் மேகப் பண்ணுக்குத் தவறாமல் அடிவைத்துப் பரதத்தைச் செய்வாய்! என்றன் கண்ணுக்கும் புண்பட்ட கருத்துக்கும் களிப்பூட்டும் மயிலே வாழ்க! மங்கையர்க்கு நின்சாயல் உண்டென்ன மனமெனக்கோ ஒப்ப வில்லை; இங்கிருக்கும் சாதியைப்போல் எண்ணற்ற கண்ணுள்ள நீளத் தோகை இங்கிதமாய் விரித்துநடஞ் செய்யுங்கால் எழுப்புகிற குரலின் ஒசை நங்கையரின் இன்குரலுக் கொப்பில்லை நகைக்கின்றார் அதனைக் கேட்டு புள்ளிமயில்! உன்னைக்கண் டாலறிவுப் புலவனுக்குத் தோகை காட்டி உள்ளமதில் கற்பனைகள் சேர்க்கின்றாய்! ஓவியன்வைத் தெழுது கோலைத் துள்ளிவிளை யாடச்செய் கின்றாய்நீ! துடுக்குள்ள பெண்ணை நோக்கி எள்ளிநகை செய்வதற்கோ நிமிர்கின்றாய்? எழில்மயிலே! மீண்டும் ஆடு! 3 |