பக்கம் எண் :

64கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1

படைத்தோன் வாழ்க!

நிலைமண்டில ஆசியரிப்பா

கற்பனை உலகம்

பிருந்தா வனத்தின் பேரெழில் கண்டேன்
பிறந்தார் உறுபயன் பெற்றேன் அன்றே;
அப்பே ரெழில்நலம் அவனியில் காணத்
தப்பியோர் விழிப்பயன் தப்பியோர் ஆவர்;
எண்ண இயலா வண்ண மலர்கள்
கண்கவர் வனப்பொடு கற்பனைப் பெருக்கும்;
நிலமிசைப் படுபுல், நிமிர்தரு செடிகள்;
வலைநிகர் கொடிகள் வகைவகை யாகக்
கைபுனைந் தியற்றிய காட்சியே காட்சி!
இருவிழி எதுவரை எட்டுமோ அதுவரை
பரவிய எல்லை படைத்ததப் பூங்கா;
பசுமையும் தண்மையும் பாங்குடன் குழைத்துப்
பூசிய தென்னப் பொலிபூங் காமிசை
வீசிய விழியோர் வியப்புற் றாங்கே
இமையா நாட்டத் திமையோர் ஆவர்;
விண்ணுல குண்டென விளம்புவர் கண்டிலேன்
கண்ணெதிர் கண்டேன்அக் கற்பனை உலகை;

நீரின் விதைகள்

நீரால் விளைத்திடும் விந்தைகள் எத்தனை!
நேரிற் காணின் அல்லது நிலைமையைப்
பாரித் துரைக்கப் பற்றுமோ ஒருநா?
ஆயினும் ஒரு சில அறைகுவன் கேண்மின்!