பக்கம் எண் :

முடியரசன் கவிதைகள்65

உரமிலா உள்ளத் தொருவன்மற் றாங்கே
மருவு மவர்தம் வயமே யாகி
இயங்குதல் உலகத் தியற்கை அதுபோல்
தனக்கென ஒருநிறம் இல்லாத் தண்ணீர்
மினுக்கிடும் பலநிற விளக்கொளி சார்தலால்
அதனதன் நிறமாய் அழகொளி காட்டிப்
புதுவிருந் தளிக்கும் போமவர் விழிக்கே!
நாடக அரங்கில் நாலுந் திரையெனப்
பாடொலி அருவிப் பாய்ச்ச லோவெனப்
பலவகை நிறநீர் பாங்குடன் இறங்கிச்
சலசல ஒலியுடன் ஓடும் ஒருபால்;
குற்றப் பட்டோர் கொடுஞ்சிறை யதனுள்
உற்றிடல் போல ஒருபால் அந்நீர்
தொட்டிச் சிறையுள் துளங்குதல் இன்றிக்
கட்டுப் பட்டுக் கிடப்பது கண்டேன்;

ஊற்றுக் குழல்நீர்

ஊற்றுக் குழல்நீர் காட்டும் வித்தை
வேற்றோ ரிடத்தும் கண்டே னல்லேன்;
விரிகுடை யோவென ஒருபாற் காணும்.
வரிசிலை யோவென ஒருபால் வளையும்,
இனிமேல் தனிமை ஏலேன் என்றே
அணிமைத் தொட்டி யகத்துள் வீழ்ந்து
மாயும் ஒருபால், மற்றொரு பாங்கர்ப்
பிரிந்தவர் கூடும் பெற்றிமை போலப்
பொருந்தும் இருபுறத் திருந்து வருநீர்;
இருபுலப் பகைவர் எதிர்எதிர் நின்று
பொருது வீழும் பான்மையே போல
அணிஅணி யாக அவ்விடை மோதும்.
எண்பே ராயமும் ஐம்பெருங் குழுவும்
தன்புடை சூழத் தனிவீற் றிருக்கும்
மன்னவன் போல மற்றவை சூழ்தர
மதர்த்து நிற்கும் மற்றொன் றொருபால்,