66 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1 |
நிரல்பட அரிவையர் நின்று நடம்புரி செயலெனப் பெரியவும் சிறியவும் ஆகி ஆடி அசைதரும் அழகினை ஒருபால் நாடி விழியால் நலம்நுகர்ந் திருந்தேன்; அச்சமும் இன்பமும் நலத்தகு நண்பர் உளத்தெழும் விழைவால் அளப்பரும் ஆழமும் அகலமும் உற்ற குளத்தினில் இயந்திரத் தோணிகள் ஏறி விரைந்தோம், நானோ வியர்வியர்த் திருந்தேன்; இருந்தஎன் நண்பர் ஏளனம் செய்தனர், வீரம் பழித்தனர், விடுத்தேன் அச்சம்; நீரில்அத் தோணி நீந்துங் காலை உலகை மறந்தேன் உயர்விற் பறந்தேன் அடடா இன்பம்? அத்தனை இன்பம்! அஞ்சுதல் ஒழிந்தார் நெஞ்சினில் இன்பம் விஞ்சுதல் உறுதிஇவ் விளக்கமும் பெற்றேன்; படைத்தவன் வாழ்க மீண்டும் திரும்பி மேடையில் நின்று காண்டகும் அந்தக் காட்சியை நோக்கி உடைத்தோ இவ்வெழிற் குவமை? இதனைப் படைத்தோன் வாழி! படைத்தோன் வாழி! என்றேன்; நண்பன் “இறைவனோ” என்றனன்; அன்றே என்றேன்; “அரசனோ” என்றான்; அறியா துரைத்தனை ஆருயிர் நண்பா! உறுதி குலையா உழைப்பினை நல்கிக் குருதியை நீராக் கொட்டிய ஏழை பாரில்இப் பூங்கா படைத்துத் தந்தனன் ஆரிதை உணர்வார்? அவனை வாழ்த்தினேன்; இதன்நலம் அறியான் பிறர்நலம் பேணுவான் இதமுடன் உழைக்குமவ் வேழையை வாழ்த்தினேன்; வாழிய அவன்குலம் வாழிய நன்றே! 81 (மைசூரிலுள்ள பிருந்தாவனத்தைக் கண்டு, மனங்குளிர்ந்து பாடியது.) |