பக்கம் எண் :

முடியரசன் கவிதைகள்67

முகிலிடை நிலா

பாம்பொன்று நினைவிழுங்கும் என்று சில்லோர்
        பகர்ந்திடுவார் அதைநம்பார் அறிவில் நல்லோர்;
வேம்பன்னார் எமைவீழ்த்த இனைய சூழ்ச்சி
        விளைத்தார்கள் தொலைத்தார்கள் தமிழர் ஆட்சி;
கூம்புவதேன் தாமரைகள் உன்னைக் கண்டு?
        குடைந்துதேன் அருந்தமலர் சென்ற வண்டு
தேம்புவதைக் காணோயோ சிறையிற் பட்டு?
        சென்றிடுவாய் வெளியில்விடச் சொல்லி விட்டு

ஆரியத்தால் ஒளியிழந்த தமிழர் போலே
        அழகிழந்தாய் உனையடைந்த மேகத் தாலே;
நாரியரின் முகங்கண்டு நாணி உள்ளே
        நண்ணினைநீ எனஎண்ணி நகைத்தாள் முல்லை;
வேறினத்தார் நாடாள வீணன் அல்லேன்
        வேலெடுத்துப் போர்தொடுப்பேன் வெற்றிகொள்வேன்
சீரழிப்பேன், எனக்கிளம்பும் வீரன்போலச்
        சிரித்தெழுந்தாய் மேகத்தைப் பிளந்து மேலே. 2

(பொன்னி இதழில் `பாரதிதாசன் பரம்பரை’ என்ற தலைப்பில் வெளிவந்த பாடல்கள். இரு பாடல்களே கிடைத்தன.)