அவள் :- படுப்பேன், புரள்வேன், பின் பஞ்சணையில் கண்ணீர் விடுப்பேன், எழுந்திருந்து வீழ்வேன்;- தொடுக்குமுயிர் தாங்கவழி யானறியேன்; தையலெனைச் சார்துயரும் ஓங்கிவளர் கின்ற துயர்ந்து. அத்தான்! உமதுயிரை ஆட்கொண்ட நானினிமேற் செத்தால் நலமென்று சிந்தித்தேன்;- பித்தாய்த் திரிவீரே என்றெண்ணிப் பேசா திருந்தேன்; அறியீரோ என்உண்மை அன்பு? பெற்றார் தடையுண்டு; பின்பிறந்தார் நால்வருண்டு; உற்றார் பலருண்டே உண்மையிது - முற்றாமல் காதல் கருகிவிடும் காலந்தான் வந்திடுமோ சாதல் உறுநிலையைத் தந்து! இருவரும் :- காணச் சகியாரோ காதலரை ஒன்றாக்கிப் பேணத் தெரியாரோ பேருலகில் - கோணற் சிறுமதிகள் தீயாவோ தீராத காதல் நறவுண்டு நாம்மகிழ நன்கு. 7 (உண்மை நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டு உருப் பெற்றவை இப்பாடல்கள்.) |