ஏன் வரவில்லை? விண்ணிடத் தெறிந்த வெள்ளைப் பூசணிக் கீற்றோ என்ன எண்ணிடப் பிறங்கும் நல்ல இளம்பிறை நிலவே! என்னை நண்ணிடத் துடிக்கும் பாவை நானிவண் வந்த பின்னும் மண்ணிடைப் பரப்பில் காணேன் மங்கைஏன் வரவே இல்லை? கண்கவர் சிறுவர் சேர்ந்து கடுமழைப் புனலில் ஓடப் பண்ணிய கப்பல் போலப் படர்பிறை நிலவே! என்றன் உண்ணிறைந் திருக்கும் செல்வி ஓடிவந் திருக்கக் காணேன் எண்ணிய தேதும் உண்டோ? ஏனவள் வரவே இல்லை? அகத்தியின் குவிபூத் தோற்றம் அன்னதோர் பிறைநி லாவே! பகற்பொழு தகலும் நேரம் பார்த்ததும் வருவேன் என்றாள் இகழ்ச்சியோ செய்கின் றாள்என் றேங்கிடும் உள்ளம் ஆங்கே பகர்ந்ததை மறந்தோ போனாள்? பாவைஏன் வரவே இல்லை? 3 |